Showing posts with label இன்று. Show all posts
Showing posts with label இன்று. Show all posts

Friday, April 14, 2023

ஏப்ரல் 15 _ இன்று

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*ஏப்ரல் 15 – 1452 - உலகப்புகழ்பெற்ற ஓவியரும் இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக் கலைஞரும், பல்துறை மேதையுமான லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பிறந்த தினம்* 
# இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார் (1452). தந்தை ஆவண எழுத்தர். மகனுக்கு கணிதம், வடிவியல், லத்தீன் மொழி ஆகிய வற்றை வீட்டிலேயே கற்பிக்க ஏற்பாடு செய்தார். 14-வது வயதில் அவனுக் குக் கலைகளில் நாட்டம் இருப்பதை அறிந்து அவற்றில் பயிற்சி பெறுவதற்காக ஒரு புகழ்பெற்ற கலைஞரிடம் அனுப்பி வைத்தார்.
# அங்கே உலோகப்பூச்சு, தச்சு வேலை, வேதியியல், பெயின்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் டாவின்சி பயிற்சி பெற்றார். கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க் கையின் யதார்த்த நிலைகளை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்.1482-ல் மிலான் போர்ப் பொறியாளராக இவர் நியமிக்கப்பட்டார். வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங் களை வடிவமைத்து உருவாக்கினார். நகர அமைப்பாளராகவும், கட்டிடவியல் துறையிலும் சேவையாற்றினார். தெருக்கள், கால்வாய்கள், புறநகர்ப் பிரிவுகள், மக்கள் குடியிருப்புகள் எனப் பல்வேறு நகர்ப் பகுதிகளையும் வடிவமைத்துக் கொடுத்தார். 
# உலகப் புகழ்பெற்ற தனது ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை 1495-ல் வரையத் தொடங்கி, 1498-ல் நிறைவு செய்தார். 1503-ல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார.
# மிலான் நகர் சென்ற இவருக்கு தேவாலயத்தில் ஓவியங்களைத் தீட்டும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தையுடன் இருக்கும் கன்னி மேரி ஓவியத்தை வரைந்தார். 1513-ல் ரோம் நகர் சென்றார். அங்கு மன்னர் இவருக்கு ஓய்வூதியம் வழங்கி அங்கேயே இருக்கும்படி கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏராளமான ஓவியங்களை வரைந்தார். 
# பல இயந்திரங்களை வடிவமைத்தார். நீர்க் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். ஓவியக்கலையின் பிதாமகர், தத்துவமேதை, வானியல் விஞ்ஞானி, பொறியியலாளர், கட்டிட நிபுணர், ராணுவ ஆலோசகர், கடல் ஆராய்ச்சியாளர், நீர்ப்பாசன நிபுணர், சிறந்த சிற்பி, கவிஞர், இசை விற்பன்னர் எனப் பல்வேறு களங்களில் செயல்பட்டார்.
# மனித உடற்கூறுகளைத் துல்லியமாக வரைந்தார். விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்தன. இவர் விட்டுச் சென்ற குறிப்பேடுகளில் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற நவீன கண்டுபிடிப்புகளின் சித்திரங்கள் காணப்பட்டன.
# ஓவியம் உள்ளிட்ட 9 வகையான கலைகளைக் குறித்தும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் திறன் பெற்றிருந்த இவர் இடதுகைப் பழக்கம் கொண்டவர். வலப்பக்கமாகத் தொடங்கி இடது பக்கமாக எழுதுவார். இவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாகத்தான் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
 # மாபெரும் விஷயங்களைத் தொடங்குவார். ஆனால் அதை முடிக்கும் முன்பாகவே வேறு ஒன்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவார். இவரது நிறைய ஓவியங்கள் முடிக்கப்படாமல் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
# மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட மகத்தான படைப்புகள், காலத்தை வென்ற படைப்பாளி என இவர் பெருமை பாடுகின்றன. உலகம் போற்றும் உன்னதக் கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதை எனப் போற்றப்பட்டவருமான லியானார்டோ டா வின்சி 1519-ம் ஆண்டு மே மாதம் 67-வது வயதில் மறைந்தார்.

ADD